பாட்னா: பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு வந்தே பாரத் ரயில், 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. புதிதாக 3 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சியில் பிஹாரின் பூர்ணியா, சீமாஞ்சல் பகுதிகள் பின்தங்கிய நிலையில் இருந்தன.
தற்போது இந்த பகுதிகளின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இரட்டை இன்ஜின் அரசால் பிஹார் முழுவதும் வளர்ச்சித் திட்டப் பணிகள் வேகம் பெற்றுள்ளன.காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.
இரு கட்சிகளின் தலைவர்களும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இதனால் பிஹாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது. பிஹாரின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்கள் பிஹாரில் நுழைய, தங்க அனுமதிக்க மாட்டோம்.
கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தள ஆட்சியின்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. இதன்காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸையும் ராஷ்டிரிய ஜனதா தளத்தையும் பிஹார் மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிஹாரின் சட்டம், ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கிராமப்புற பெண்கள் ட்ரோன்களை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்களின் வருவாய் பெருகி உள்ளது.
வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன. இதை மக்கள் நம்ப தயாராக இல்லை.
இரு கட்சிகளும் வாரிசு அரசியலை ஊக்குவித்து வருகின்றன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது. அவர்கள் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை மக்களே, எனது குடும்பம். மக்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறேன்.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் பிஹார் தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது சிலருக்கு பிடிக்கவில்லை. சிலருக்கு (ராகுல் காந்தி) பிஹாரின் உணவு வகைகள் குறித்துகூட தெரியாது. ஆனால் அந்த நபர்கள் பிஹாரில் சுற்றித் திரிகின்றனர். விரைவில் தீபாவளி, சாத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் இந்த பண்டிகை காலங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வரும் 22-ம் தேதி ஜிஎஸ்ஜி 2.0 வரி விகிதம் அமல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். குறிப்பாக பெண்களின் சமையல் செலவு கணிசமாக குறையும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.