பாட்னா: பிஹாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிஹாரில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடையே கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களில் 33 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மின்னல் தாக்குதல்களில் அதிகளவில் உயிரிழந்தனர்
இதுகுறித்து பேசிய பிஹார் மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விஜய் குமார் மண்டல், “பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு மின்னல் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்
பிஹார் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின்னல் தாக்குதலால் உயிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் 243 பேர் மின்னல் தாக்குதலால் உயிரிழந்ததாகவும், 2023 ஆண்டு 275 பேர் உயிரிழந்ததாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.