பாட்னா: பிஹாரில் தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான கோபால் கெம்கா அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிஹாரில் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் கோபால் கெம்கா. பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவருடைய வீடு பாட்னாவில் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியிலிருந்து வீடு திரும்பிய கெம்காவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் இப்போது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாட்னா காவல் கண்காணிப்பாளர் திக் ஷா கூறும்போது, “கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கும் மருத்துவமனைக்கும் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு புல்லட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.இந்நிலையில், பிஹாரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.