அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். லாலு தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தேர்தலை முக்கியமானதாகக் கருதுகிறார். ஆனால், பாஜகவினருக்கு அப்படியல்ல.
பாஜக தொண்டர்களைப் பொறுத்தவரை, ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கான தேர்தல் இது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். பிஹார் எனும் புனித பூமியில் இருந்து இந்த ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
மத்தியிலும் பிஹாரிலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளையடித்தனர். லாலுவும் அவரது கட்சியும் பிஹாரை கொள்ளையடித்தன. காங்கிரஸ் ரூ.12 லட்சம் கோடிக்கு மோசடி செய்தது. ஆனால், நரேந்திர மோடியின் ஆட்சி அதற்கு நேர் எதிரானது. மோடி அரசாங்கம் 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. எதிரிகளால் ஒரு ஊழல் குற்றச்சாட்டைக்கூட கூற முடியவில்லை. அந்த அளவுக்கு நாங்கள் அரசாங்கத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துகிறோம்.
சமீபத்தில் ராகுல் காந்தி பிஹாரில் ஒரு யாத்திரை நடத்தினார். வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதால், அதற்கு எதிராக அவர் அந்த யாத்திரையை நடத்தினார். ஊடுருவல்காரர்கள் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என லாலுவும் ராகுலும் விரும்புகிறார்கள். ஊடுருவல்காரர்களுக்கு நாம் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டுமா?
இங்கே இவ்வளவு பேர் இருக்கிறீர்கள். உங்களில் யாருக்கேனும் வாக்குரிமை பறிபோனதா? இல்லை. ஏனெனில், நீங்கள் அனைவரும் இந்திய குடிமக்கள். ராகுல் காந்திக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் பிஹாருக்குச் சென்றாலும் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றாலும், எங்கள் நிலைப்பாடு உறுதியானது. ஊருவல்காரர்களை ஒவ்வொருவராக நாங்கள் விரட்டுவோம். நீங்கள் (ராகுல் காந்தி) ஊடுருவல்காரர்களை காப்பாற்ற விரும்புகிறீர்கள். நாங்கள் (பாஜக) ஊடுருவல்காரர்களை விரட்ட விரும்புகிறோம்.
மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் பிஹாருக்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி. மோடியின் ஆட்சியில் 2014 முதல் 2025 வரை வழங்கப்பட்ட தொகை ரூ.16 லட்சம் கோடி. பிஹாரில் ஏராளமான சாலைகள் போடப்பட்டுள்ளன, நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஏராளமான திட்டங்களை பிஹாருக்கு கொடுத்ததவர் நரேந்திர மோடிதான்.” என தெரிவித்தார்.