பாட்னா: பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 32 லட்சம் வாக்காளர்களை மட்டுமே சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 11,000 பேரை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்பதுடன் அவர்கள் அங்கு வசித்ததாக அண்டை வீட்டாராலும் உறுதி செய்யப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில், அந்த முகவரிகளில் எந்த வீடும் அல்லது குடியிருப்பும் இல்லை. அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக (வங்கதேசத்தினர் அல்லது ரோஹிங்கியாக்கள்) அண்டை மாநிலங்களில் வசித்து வந்திருக்கலாம், எப்படியோ பிஹாரில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் சுருக்கத் திருத்தப் பணி மேற்கொள்ளும்போது தேவையான சோதனைகள் இல்லாததாலோ அல்லது முறைகேடான வழியிலோ அவர்களின் பெயர் நீக்கப்படாமல் இருந்திருக்கலாம். இது தேர்தலின்போது கள்ள வாக்குகள் பதிவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
பிஹாரில் 3 முறை கட்டாய பரிசோதனைக்கு பிறகும் 41.6 லட்சம் வாக்காளர்கள் (மொத்த வாக்காளர்களில் 5.3% பேர்) அவர்களின் முகவரிகளில் காணப்படவில்லை. இவர்களில் 14.3 லட்சம் (1.8%) பேர் இறந்திருக்கலாம் எனவும் 19.7 லட்சம் பேர் அல்லது 2.5% பேர் நிரந்தரமாக இடம் மாறியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. 7.5 லட்சம் அல்லது 0.9% பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்ட நிலையில் 11,000 பேரை முற்றிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்காமல் இருப்பதும் கள்ள வாக்குகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். முகவரியில் காணப்படாத வாக்காளர்கள் எண்ணிக்கை, சில தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருக்கலாம். எனவே இதுபோன்ற முரண்பாடுகளை கண்டறிந்து களைவதற்கு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அவசியமாகிறது’’ என்றார்.
பிஹாரின் 7.9 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 96% பேர் தங்கள் சேர்க்கை படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். இதுவரை பெறப்பட்ட 90.6% வாக்காளர் படிவங்களில் கிட்டத்தட்ட 88.2% டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.