பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் குற்றமும் ஊழலும் அதிகரித்துள்ளன என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் குற்றமும், ஊழலும் அதிகரித்துள்ளன. இதுதான் பிஹாரின் நிலைமை. கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றின் நிலை மோசமாக உள்ளது. தனிநபர் வருமானம் மற்றும் தனிநபர் முதலீட்டைப் பொறுத்தவரை பிஹார் மிக மோசமான நிலையில் உள்ளது. விவசாயிகளின் வருமானத்தில் பிஹார் கடைசி இடத்தில் உள்ளது. பிஹாரில் தொழில் இல்லை, வணிகமும் இல்லை” எனத் தெரிவித்தார்
இன்னும் சில மாதங்களில் பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேஜஸ்வி யாதவ் அம்மாநிலத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கடுமையாக தாக்கி வருகிறார்.
முன்னதாக, நேற்று தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிஹார் பந்த்-காக பாஜக ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம்.காவல்துறை மற்றும் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுப்பது போல, போக்குவரத்தை நிறுத்துமாறு காவல்துறையினரிடமே கூறியிருக்கலாம். உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக நேற்று உலகம் முழுவதிலுமிருந்து குண்டர்களை கட்டவிழ்த்து விட்டது.
பெண்கள் மற்றும் ஆசிரியர்களை பாஜக குண்டர்கள் அடித்தனர், கர்ப்பிணிப் பெண்களைத் தடுத்தனர். பெரியவர்களைத் தள்ளினர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்தனர், ஆம்புலன்ஸ்களை நிறுத்தினர் மற்றும் தியாகிகளின் குடும்பங்களை அடித்தனர்” என்று அவர் கூறினார்.