பாட்னா: பிஹாரின் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார்.
பிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தராகண்ட்டின் ஜோதிர் பீட சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, “நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக பல வாக்குறுதிகளை அளித்தும் எந்த கட்சியும் பசுவதைக்கு எதிராக உறுதியாக செயல்படவில்லை. பிஹார் மாநிலத் தேர்தலின்போது பசு பாதுகாப்பு மற்றும் சனாதன தர்மத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க வேண்டும்.
வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்த உள்ளோம். அவர்களின் பெயர்களை இப்போது வெளியிட மாட்டேன். அவ்வாறு செய்தால், அவர்களின் வேட்புமனு ரத்து செய்யப்படலாம். பசு பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சுயேட்சை வேட்பாளர்களை 243 தொகுதிகளிலும் நாங்கள் அடையாளம் காண்போம். அவர்களுக்கு எனது ஆசி கிடைக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் பசு பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள்.
பசுக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக பல கட்சிகளை நாம் ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். ஆனால், இந்த திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பசு வதையை பாவமாகக் கருதும், பரந்த உணர்வுள்ள இந்துக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே நாம வாக்களிக்க வேண்டும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தும் நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. மத்திய அரசு இவ்விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பசுவதையில் ஈடுபடும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இத்தகைய அரசியல்வாதிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
தனது கட்சி பசு பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஒருபுறம் கூறினாலும், நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இது மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் தொந்தரவு அளிக்கக்கூடியதாகவும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பிஹாரில் பசு பாதுகாப்பு யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவரது இந்த அறிவிப்பு, தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.