புதுடெல்லி: உ.பி.யின் கான்பூரில் உள்ள ராவத்பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடைபெற்றது. இதையொட்டி இக்கிராமத்தில் ‘ஐ லவ் முகம்மது’ என்ற வாசகத்துடன் மின்சாரப் பலகை நிறுவப்பட்டது. முதல் முறையான இந்தப் பலகை மிலாது நபி ஊர்வலத்திலும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முஸ்லிம்களின் வாசகப் பலகை அகற்றப்பட்டது.
இதையடுத்து வகுப்புவாதத்தை தூண்டியதாக அடையாளம் தெரியாத 15 பேர் உட்பட 24 பேர் மீது உ.பி. காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குப் பதிவு நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. நபிகள் நாயகம் மீது அன்பை வெளிப்படுத்துவதில் யாருக்கு என்ன பிரச்சினை என முஸ்லிம் தரப்பு கேள்வி எழுப்பியது.
உ.பி.யின் பரேலியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் ‘ஐ லவ் முகம்மது’ சுவரொட்டிகளை வைக்குமாறு மவுலானா குர்ஷித் ஆலம் வேண்டுகோள் விடுத்தார். பரேலியைச் சேர்ந்த மவுலானா தவுகீர் ராசா இன்று (செப்.26) போராட்டம் அறிவித்துள்ளார்.
இப்பிரச்சினை பிற மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கியது. டெல்லியில் நடந்த ‘ஐ லவ் முகம்மது’ நிகழ்வு ரத்து செய்யப்பட்டு, அதன் ஏற்பாட்டாளர் சாகிரை போலீஸார் கைது செய்தனர்.
உ.பி.யின் வாராணசி, ம.பி.யின் உஜ்ஜைன் நகரங்களில் இந்து அமைப்புகள் களத்தில் இறங்கின. உஜ்ஜைனில், ‘ஐ லவ்மகாகல்’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது. உ.பி.யில் ‘ஐ லவ் மகாதேவ், ஐ லவ் ஹனுமான்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வைரலாகத் தொடங்கியது.
வாராணசியின் ஒரு பகுதி துறவிகளும் இப்பிரச்சினையை ஒரு நேரடி சவாலாக எடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கராச்சாரியார் நரேந்திரானந்த சரஸ்வதி கூறுகையில், “இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கும் சதி. 30 கோடி மக்கள் முகம்மதுவின் பெயரில் பேரணி நடத்தினால், 100 கோடி மக்கள் மகாதேவின் பெயரில் பேரணி நடத்துவார்கள்” என அறிவித்துள்ளார்.
மும்பையின் மும்ப்ராவில் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. நாக்பூரில் உள்ள மோமின்புராவிலும் உத்தராகண்டில் உள்ள காஷிப்பூரிலும் கூட வன்முறை வெடித்தது.
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “நான் முகமதுவை நேசிக்கிறேன். இது குற்றமல்ல. இது எங்கள் நம்பிக்கையின் ஒரு பகுதி. அரசியலமைப்பின் 25-வது பிரிவு எங்களுக்கு இந்த உரிமையை வழங்குகிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, “பாஜக தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க வெறுப்பைப் பரப்புகிறது” என குற்றம் சாட்டியுள்ளார். “ஐ லவ் முகமது என்று எழுதியதற்காக வழக்குப் பதிவு செய்வது ஒரு மனநோய்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முதல்வருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.