புதுடெல்லி: பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது பிரேசில், கானா, நமீபியா ஆகிய நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருதுகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இதுவரை 27 உலக நாடுகளின் மிக உயரிய சிவில் விருதுகளைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, உலகின் பெரிய மற்றும் சிறிய நாடுகளுடன் வலுவான ராஜதந்திர உறவுகளை வளர்த்து வருவதன் மூலம், இந்தியாவின் உலகளாவிய நிலையை மாற்றியுள்ளார்.
பிரமதர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றி உள்ளது. அதோடு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கிய தருணங்களில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் மரியாதையையும் நாடு பெற்றது.
தனது அரிய சாதனைகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறார். மிக உயர்ந்த தலைமைப் பண்பு மற்றும் ராஜதந்திர திறன்கள் மூமல் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி 27 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது நமீபியாவின் மிக உயர்ந்த சிவி்ல் விருதான தி ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது பிரதமருக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணம். உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்து மற்றும் மரியாதைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.