புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், பிரளய் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரளய் ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான சோதனைகள் அப்துல் கலாம் தீவில் ஜூலை 28 மற்றும் 29 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தாக்கும் திறனை மதிப்பிடுவதன் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததையடுத்து இந்த ஏவுகணை சோதனையின் அனைத்து நோக்கங்களும் பூரத்தி செய்யப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரளய் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட திட எரிபொருள் குவாசி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது, பல்வேறு இலக்குகளை குறிவைத்து பல வகையான ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய டிஆர்டிஓ-வுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவி்த்தார். இந்த ஏவுகணை எதிரிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை ஆயுதப்படைகள் வலிமையாக எதிர்கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.