புதுடெல்லி: “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “பிரதமர் தனது விமானத்தில் பறக்கும்போது, அவர் கீழே பார்த்து, ‘அது எந்த நாடு?’ என்று கேட்பார். அது எந்த நாடு என்பதைக் கூறுவார்கள். ‘கவலைப்பட வேண்டாம், நாம் செல்லும் இடத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்வோம்; இப்போது இங்கே தரையிறங்கலாம்’ என்று பிரதமர் கூறுவார். ஏனெனில், அவர் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்குவார். அப்படித்தான் அவர் பாகிஸ்தானிலும் தரையிறங்கினார். அங்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தார். நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது, ஆனால், அவர் அங்கு தரையிறங்கலாம்!” என்று கிண்டலாகப் பேசினார்.
கடந்த 2015-ம் ஆண்டு, பிரதமர் மோடி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைச் சந்திக்க பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி பகவந்த் மான் இவ்வாறு பேசினார். 2015-ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொணட பிரதமர் மோடி, திரும்பும்போது ஆப்கானிஸ்தானுக்கும், பின்னர் பாகிஸ்தானுக்கும் சென்றுவிட்டு நாடு திரும்பினார்.
இந்த வார தொடக்கத்திலும், ஒரு விழாவில் பேசும்போது பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து முதல்வர் பகவந்த் மான் இதேபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு வெளியுறவு அமைச்சகம், பகவந்த் மான் பெயரைக் குறிப்பிடாமல், அந்தக் கருத்துகள் “பொறுப்பற்றவை மற்றும் வருந்தத்தக்கவை” என்று கூறியது.
வெளியுறவுத் துறையின் இந்த பதில் குறித்து கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த பகவந்த் மான், “வெளியுறவுக் கொள்கை பற்றி கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லையா? எதிர்காலத்திலும் நான் தொடர்ந்து கேட்பேன். நாட்டில் 140 கோடி மக்கள் இருப்பதால், பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவேன் என்று அவர் கூறுகிறார். ஆனால், பஞ்சாப் – ஹரியானா இடையேயான தண்ணீர் பிரச்சினைகளை கூட அவரால் தீர்க்க முடியாது” என விமர்சித்தார்.