புதுடெல்லி: 2023 கலவரத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக நாளை (செப்.13) மணிப்பூர் மாநிலம் செல்கிறார். ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், ரூ.1,200 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய 5 மாநிலங்களுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். நாளை காலை மிசோரம் செல்லும் பிரதமர் மோடி, தலைநகர் அஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து நாளை மதியம் 12.30 மணி அளவில் மணிப்பூர் செல்லும் பிரதமர், சுராசந்பூர் நகரில் ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, அங்கு குழுமியிருக்கும் மக்களிடையே அவர் உரையாற்றுகிறார்.
இதையடுத்து, மணிப்பூர் தலைநகர் இம்ப்பால் செல்லும் பிரதமர், அங்கு ரூ.1,200 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைக்கிறார். அங்கும் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குகி – மைத்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அந்த மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு குழுக்களிடையே சமரசம் ஏற்படுத்தும் அரசின் முயற்சிகள் தொடர்ந்து பலனளிக்காத நிலை நீடித்து வந்தது. இந்த பின்னணியில், கலவரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை அம்மாநிலத்துக்குச் சென்று அம்மக்களிடையே உரையாற்றுகிறார். பிரதமரின் இந்த பயணத்தின் மூலம், மணிப்பூரில் இயல்பு நிலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மாலையே பிரதமர் மோடி அசாம் செல்கிறார். மாலை 5 மணி அளவில், குவஹாத்தில் நடைபெற உள்ள பாரத ரத்னா டாக்டர் பூபென் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
14-ம் தேதி அசாமில் ரூ.18,530 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அல்லது தொடங்கி வைக்கிறார். அசாமின் கோலாகாட் பகுதியில் அசாம் பயோ எத்தனால் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கிவைக்கும் பிரதமர், பாலிப்ரோபிலின் பிளாண்ட்டுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
15-ம் தேதி மேற்கு வங்கம் செல்லும் பிரதமர், 16-வது ஒருங்கிணைந்த பாதுகாப்பு மாநாட்டை தொடங்கிவைக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து பிஹார் செல்லும் பிரதமர் அங்கு ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார் அல்லது அடிக்கல் நாட்டுகிறார். தேசிய மக்காணா வாரியத்தையும் அவர் தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.