பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் ஏஐ வீடியோ தொடர்பான சர்ச்சையில், சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு பாட்னா உயர் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் தொடர்பான ஏஐ வீடியோவை பிஹார் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி தூங்கும் போது, அவரது கனவில் வரும் தாய் ஹீராபென் மோடி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியை திட்டுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்தது. மேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மீது பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த பாட்னா உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி பி.பி.பஜந்தரி, பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயார் குறித்த ஏஐ வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த வீடியோவின் பரவலைத் தடுக்க அனைத்து சமூக வலைதள ஊடகங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனுவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையமும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் சித்தார்த் பிரசாத், “அந்த வீடியோவை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகிள் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என்று தெரிவித்தார்.