புதுடெல்லி: பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
5 நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்த ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு, இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இரு தரப்பு உறவை மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 75ம் ஆண்டை நினைவுகூரும் வகையில், சிறப்பு தபால் தலையை தலைவர்கள் இருவரும் வெளியிட்டனர். இதையடுத்து, தலைவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா – பிலிப்பைன்ஸ் உறவை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முடிவு உரிய பலனை அளிப்பதற்கான விரிவான செயல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் முதல் பசுபிக் வரை நாம் பகிரப்பட்ட மதிப்புகளால் ஒன்றுபட்டுள்ளோம். நமது இரு நாடுகளுக்கு இடையே இருப்பது கடந்தகால நட்பு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கான வாக்குறுதியும்கூட.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, செழிப்பு மற்றம் விதிகள் சார்ந்த ஒழுங்குமுறை அமலில் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். சர்வதேச சட்டங்களின்படி கடல்வழி சுதந்திர வர்த்தகத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்ததற்காகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நின்றதற்காகவும் பிலிப்பைன்ஸ் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.