புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்கப்பூர் அதிபர் லாரன்ஸ் வாங் 3 நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித் துறை அமைச்சர் ஜெப்ரி, வர்த்தக துறை அமைச்சர் கான் சியோ ஹுவாங் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று அவர் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து பயிற்சி, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் திறன்சார் பயிற்சி, செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம், வங்கி, முதலீடு சார்ந்த தகவல் பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சிங்கப்பூர் விளங்குகிறது. பாதுகாப்பு துறையில் இரு நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. பசுமை கப்பல் போக்குவரத்து, திறன் மேம்பாடு, சிவில் அணு சக்தி, நகர்ப்புற நீர் மேலாண்மை, செமி கண்டக்டர் உற்பத்தி, தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இந்தியாவின் யுபிஐ, சிங்கப்பூரின் பே நவ் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்புகள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு உள்ளன. இந்திய துறைமுகங்களின் கட்டமைப்புகளை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த துறையில் சிங்கப்பூரின் நிபுணத்துவம் இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிங்கப்பூரின் பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் நிறுவனம் மும்பை துறைமுகத்தில் உருவாக்கிய புதிய முனையம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மும்பை துறைமுகத்தின் சரக்குகளை கையாளும் திறன் மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படும். சிங்கப்பூர் மற்றும் ஆசியான் கூட்டமைப்புடன் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பஹல்காம் தாக்குதலை கண்டித்த சிங்கப்பூர் அரசுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் கூறும்போது, “இந்தியா, சிங்கப்பூர் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலையற்றதன்மை காணப்படுகிறது. இந்த காலத்தில் இந்தியா, சிங்கப்பூர் உறவு மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. விமான போக்குவரத்து, செமி கண்டக்டர் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். குஜராத்தின் கிப்ட் சிட்டி இந்தியா, சிங்கப்பூர் இடையே பாலமாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.
சென்னையில் பயிற்சி மையம்: கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சென்னை, ஹைதராபாத், புவனேஸ்வர், கான்பூர், லூதியானா நகரங்களில் தேசிய திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்படும். இந்த திட்டம் ரூ.60,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மத்திய அரசு சார்பில் ரூ.30,000 கோடி, மாநில அரசுகள் சார்பில் ரூ.20,000 கோடி, தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
இதில் சென்னையில் அமைய உள்ள திறன் பயிற்சி மையத்தை நிறுவ சிங்கப்பூர் அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் கூறும்போது, “இந்தியாவின் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். சென்னையில் திறன் பயிற்சி மையம் அமைக்க சிங்கப்பூர் அரசு உதவி செய்யும். இந்த திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.