புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய மத்திய தகவல் ஆணையம் வழங்கிய அனுமதியை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-ம் ஆண்டு பிஏ பட்டம் பெற்றதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் நோக்கில் நீரஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “1978-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த அனைத்து மாணவர்களின் பதிவேடுகளையும் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்” என கோரி இருந்தார். அவரது இந்த கோரிக்கைக்கு தகவல் உரிமை ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
எனினும், இதை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், “1978-ம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் பங்கேற்ற அனைத்து மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன. வெளியிடும் ஆவணங்களில் இருந்து அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்ரதவை ரத்து செய்ய வேண்டும்” என டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் விசாரணையின் முதல் நாளிலேயே தகவல் உரிமை ஆணையத்தின் உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இதையடுத்து நடைபெற்ற வாதத்தில், டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 6, தகவல் வழங்கப்பட வேண்டும் என்ற ஆணையை வழங்குகிறது, அதுதான் அதன் நோக்கம்.
ஆனால், ஒருவரின் ஆர்வத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காக தனிநபர்களின் தனிப்பட்ட ஆவணங்களை வெளியிடுவது அதன் நோக்கமல்ல. மத்திய தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என வாதிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.