பெங்களூரு: ‘டெல்லியில் பிரதமரின் இல்லம் உள்ள சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன. ஆனால், ஊடகங்கள் கர்நாடகாவை மட்டுமே காட்டுகின்றன’ என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், “நான் நேற்று டெல்லியில் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கே பிரதமரின் இல்லம் உள்ள சாலையில் எத்தனை பள்ளங்கள் உள்ளன என்பதை ஊடகங்கள் பார்க்க வேண்டும். மோசமான சாலைகள் என்பது நாடு தழுவிய பிரச்சனை.
இந்தப் பள்ளங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்று நான் பெரிய ஐடி நிறுவனங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால் அவற்றை சீரமைப்பதற்கு எங்களின் கடமையை செய்து வருகிறோம். இந்தியா முழுவதும் இதுதான் நிலைமை. ஆனால், ஊடகங்கள் கர்நாடகாவில் மட்டுமே இந்த நிலை உள்ளது என்று காட்டுகின்றன. முந்தைய ஆட்சியில் பாஜக சாலைகளை சிறப்பாக அமைத்திருந்தால் இப்போது சாலைகள் ஏன் இப்படி மோசமாக இருக்கின்றன.
மழை பெய்தாலும் தினமும் ஆயிரக்கணக்கான பள்ளங்கள் நிரப்பப் படுகின்றன. நாடு முழுவதும் மோசமான சாலைகள் உள்ளதற்கு பாஜகவே காரணம். ஆனால், ஊடகங்கள் கர்நாடகாவை மட்டுமே காட்டுகின்றன. நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளங்களையும் நிரப்ப ஒப்பந்ததாரர்களுக்கு இறுதி காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் சாலை பழுது மற்றும் கட்டுமானத்திற்காக ரூ.1,100 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் இலக்கு சுத்தமான பெங்களூரு மற்றும் சீரான போக்குவரத்து இயக்கம் என்பதுதான்” என்றார்.
பெங்களூருவின் சாலை பள்ளங்கள் குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி, அதனை “பள்ளங்களின் நகரம்” என்று விமர்சித்தார். மோசமான சாலை வசதிகளை காரணம் காட்டி, கடந்த வாரம் பிளாக்பக் நிறுவனம் பெங்களூருவிலிருந்து இடம்பெயர உள்ளதாக கூறியதைத் தொடர்ந்து இது குறித்த சர்ச்சை அதிகரித்தது.