பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப். 1-ம் தேதி வரை வாக்காளர் அதிகார யாத்திரை நடைபெற்றது. இந்நிலையில் தர்பங்கா நகரில் அண்மையில் இந்த யாத்திரையின்போது எதிர்க்கட்சிகளின் ஒரு மேடையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்களின் இந்தப் பேச்சுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசியதற்கு எதிராக பிஹாரில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆளும் என்டிஏ கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ‘‘காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முழு அடைப்பு அனுசரிக்கப்படும். என்றாலும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்தப் போராட்டத்துக்கு மகளிர் அணி தலைமை வகிக்கும்’’ என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் உமேஷ் குஷ்வாகா கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் பேரணியில் பிரதமர் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியது தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தவறு. இதற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.
நமது தாயார் மற்றும் சகோதரிகளை அவர்கள் அவமதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். முழு அடைப்பின்போது மாநிலம் முழுவதும் மகளிர் அணி போராட்டங்கள் நடத்தும்’’ என்றார். இதற்கிடையில் பிரதமர் மோடி, தன்னையும் மறைந்த தனது தாயார் பற்றியும் அவதூறாக பேசப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தியதாக கூறினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, இப்போது உயிருடன் இல்லாத எனது தாயார் பற்றி காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் அவதூறாக பேசி உள்ளனர். சகோதரிகளும் தாய்மார்களும் உணர்ந்த வலியை என்னால் உணர முடிகிறது. இது மிகவும் வேதனையானது. அரச குடும்பத்தில் தங்கம், வெள்ளி ஸ்பூனுடன் பிறந்த இளவரசரால் ஏழைத் தாயின் வலியை புரிந்துகொள்ள முடியாது’’ என்றார்.