ஹைதராபாத்: பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியைப் போலவே, பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஆர்எஸ் எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கட்சித் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகியோர் நல்லவர்களே. எனினும், மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸும் தெலங்கானா விவசாயிகளைப் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். யூரியா பற்றாக்குறையால் தெலங்கானா விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களையும் அவர்களின் கோபத்தையும் வெளிப்படுத்தவே இந்த முடிவு.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நோட்டா இருந்திருந்தால் பிஆர்எஸ் எம்பிக்கள் அதை பயன்படுத்தி இருப்பார்கள். அது இல்லாததால், நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்கிறோம்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி இதை கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளரும் எம்பியுமான சாமலா கிரண் குமார் ரெட்டி, “தெலங்கானாவில் நிலவும் யூரியா பற்றாக்குறையை ஒரு காரணமாகக் கூறி குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக பிஆர்எஸ் கூறுவது அபத்தமானது. மக்களவையில் பிஆர்எஸ் கட்சிக்கு ஒரு எம்பி கூட கிடையாது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என மாற்றிக் கொண்டதில் இருந்தே அக்கட்சி, தெலங்கானாவின் உணர்வில் இருந்து அது தன்னை தூரமாக விலக்கிக் கொண்டது. அது பிறந்த காரணத்தையே அது மறந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்.
பிஆர்எஸ் கட்சிக்கு மக்களவை உறுப்பினர்கள் இல்லை என்ற போதிலும், மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை (செப்.9) புதுடெல்லியில் நடைபெற இருக்கிறது. நாளைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.