ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க தொடர் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.
“நான் என் அப்பாவுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதுகிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் எழுதிய கடிதம் எப்படி பொது வெளியில் கசிந்தது. அந்த செயலை செய்தது யார்? அதை ஏன் இதுவரை கண்டறியவில்லை? ஆனால், நீங்கள் ஏன் உங்கள் துணிச்சலை என்னிடம் வெளிப்படுத்துகிறீர்கள்.
சிலர் கேசிஆரின் (கே.சந்திரசேகர ராவ்) பெயரை சொல்லி என்னிடம் தவறான மெசேஜ்களை பகிர்ந்தனர். அது வேதனை தருகிறது. பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்கும் முயற்சியை கட்சிக்குள் இருப்பவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். நான் சிறையில் இருந்தபோது இது ஆரம்பமானது. அதை நான் அப்போதும் எதிர்த்தேன். இப்போதும் எதிர்க்கிறேன்.
என்னிடம் அது குறித்த பேச்சை கொண்டு வந்தவர்களிடம் திட்டவட்டமாக எனது மறுப்பை வெளிப்படுத்தினேன். அந்த செயல் லட்ச கணக்கான கட்சி தொண்டர்களை பாதிக்க செய்யும். மீண்டும் நான் சிறை செல்லக் கூட தயார். ஆனால், அதை அனுமதிக்க மாட்டேன். கேசிஆர் தலைமையை தவிர வேறு யாரது தலைமையையும் ஏற்க மாட்டேன்” என கவிதா கூறியுள்ளார். இதை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தனது கடவுள் என்றும் அவரை சில பிசாசுகள் சூழ்ந்து இருப்பதாகவும் கவிதா அண்மையில் தெரிவித்தார். தனது சகோதரர் கே.டி.ராமராவின் பெயரை குறிப்பிடாமல் கவிதா இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், சமூக வலைதளத்தில் அவருக்கு எதிரான பதிவுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் புதிய கட்சியை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.