ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்ததால், தற்போதைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. பிஆர்எஸ் ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணை, அப்போதைய ஆட்சியாளர்களால் கமிஷன் பெறப்பட்டு, தரமின்றி கட்டப்பட்டதாக தற்போதைய காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி வருவதோடு, இதற்காக சிபிஐ விசாரணை தேவை என்றும் முடிவு செய்துள்ளது.
இது தற்போது தெலங்கானாவில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. சிபிஐ விசாரணை தேவை என ரேவந்த் ரெட்டி அரசு தீர்மானித்ததை தொடர்ந்து, பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா தனது கட்சியினர் மீது தீவிர குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
“காலேஷ்வரம் அணை கட்டும்போது, தெலங்கானா மாநில நீர்வளத்துறை அமைச்சராக ஹரீஷ் ராவ் இருந்தார்.(இவர் கவிதாவின் சொந்த தாய்மாமன் ஆவார்) மேலும், இதில் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சந்தோஷும் சம்பந்தப்பட்டுள்ளார். இவர்களால்தான் என்னுடைய தந்தையான கே. சந்திரசேகர ராவுக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
தற்போது சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது. இப்போதெல்லாம் சந்திரசேகர ராவை சுற்றிலும் என்னை குறை கூறும் கும்பல் மட்டுமே உள்ளது” என கவிதா சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இது தெலங்கானா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, என்ன நடக்குமோ என எதிர்பார்த்திருந்த வேளையில், நேற்று பிஆர்எஸ் கட்சியின் செயலாளர்களான பரத் குமார் மற்றும் ரவீந்திரநாத் ராவ் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்ட நிஜாமாபாத் மேலவை உறுப்பினரான கே. கவிதா, பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
இது அக்கட்சித் தொண்டர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து, கவிதா, தனது அடிப்படை உறுப்பினர் பதவியையும், மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. மேலும் அவர் தெலங்கானாவில் புதிய கட்சியையும் தொடங்குவார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.