புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். எனினும் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் இதயநோய் மருத்துவர் திரேந்திர சிங்கானியா கூறியதாவது: மாரடைப்பு அபாயத்திற்கு ஸ்டீராய்டுகள், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் (குறிப்பாக பெண்களுக்கு) காரணங்களாக உள்ளன. பிரபலமாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, அனைவரும் உடலுக்கான விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்.
பிரபலங்கள் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க முயற்சி செய்கின்றனர். பல நேரங்களில், அதை அடைவதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை.
தூக்கமின்மை, இதய ஆபத்துக்கான காரணியாக அறியப்படுகிறது. பல பிரபலங்கள் சில நேரங்களில் இரவு முழுவதும் விழித்திருக்கின்றனர். ஸ்டீராய்டுகள், ஓவர் டோஸ் மருந்துகள், மாதவிடாய் நிறுத்தத்திற்கான சிகிச்சை உள்ளிட்ட ஹார்மோன் சிகிச்சைகள் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தக் கூடும்.
மன அழுத்தம், சமூக ஊடகத்தில் அடிமையாகி கிடத்தல் ஆகியவையும் அதிக ரத்த அழுத்தம், கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு காரணமாக உள்ளன. இது இறுதியில் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களும் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். இளமை தோற்றத்துக்கான சிகிச்சைகள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் ஏதேனும் ஹார்மோன் சிகிச்சையும் ஷெபாலி ஜரிவாலா எடுத்துக் கொண்டிருந்தால் அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.