சண்டிகர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப் பேரவை தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா மீது, ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், ‘தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக பொய் சொல்லி எம்எல்ஏ ஹர்மீத் என்னுடன் தொடர்பு வைத்திருந்தார்.
மேலும், என்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிரட்டல், ஆபாச படங்கள் போன்றவற்றை அனுப்பும் செயல்களில் ஈடுபட்டார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஹர்மீத்தை நேற்று, கர்னால் என்ற இடத்தில் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு, போலீஸ் அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு அவரும், அவரது கூட்டாளிகளும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு 2 கார்களில் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து போலீஸார், அவர்களை வாகனத்தில் விரட்டிச் சென்றனர். ஓரிடத்தில் அவர்களது ஒரு காரை மட்டும் போலீஸார் மடக்கினர். காரிலிருந்து 3 துப்பாக்கிகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு காரில் இருந்த எம்எல்ஏ தப்பிச்சென்றுவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ. மீது புகார் கொடுத்த அந்த பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
ஹர்மீத் பதன்மஜ்ராவுடன் அவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில், எம்எல்ஏ தனது மனைவியை 2013-ல் விவாகரத்து பெற்றதாக கூறி கடந்த 2021-ல் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2022 -ம் ஆண்டு, ஹர்மீத் பதன்மஜ்ரா, சனூர் தொகுதியில் போட்டியிட்டபோது, அவர் தனது முதல் மனைவியின் பெயரை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த 2-வது மனைவி, இது குறித்து கேட்டதற்கு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிடுவதாக கூறிவந்ததாக தெரியவந்துள்ளது.