பாலக்காடு: பாலியல் புகாரில் சிக்கிய கேரளாவின் பாலக்கோடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் பாலக்காடு சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ராகுல் மாம்கூட்டத்தில். இவர் சமூக ஊடகம் மூலமாக பாலியல் தொந்தரவு செய்ததாக எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், மாடல் ரினி ஆன் ஜார்ஜ் ஆகியோர் கேரள டிஜிபிக்கு புகார் அளித்தனர். இதையடுத்து அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அவர் எம்எல்ஏவாக தொடர்கிறார். அவர் மீது திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி பினு குமார், பிஎன்எஸ் சட்டப்பிரிவு மற்றும் கேரள காவல்துறை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து கேரள எதிர்க்கட்சி தலைவர் சதீஸன் கோழிக்கோட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் அலுவலகத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர். எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் மீது புகார் எழுந்ததும் காங்கிரஸ் கட்சி அவரை சஸ்பெண்ட் செய்து கேரள அரசியல் வரலாற்றில் முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தற்போது முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சதீஸன் கூறினார்.