புதுடெல்லி: மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 9) நடைபெறும் பாரத் பந்த் காரணமாக கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பரவலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, வங்கிகள், தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பந்த் நடைபெறுகிறது.
இதில் நாடு முழுவதும் 25 கோடி பேர் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஆங்காங்கே மக்களின் இயல்புநிலை பாதிக்கும் அளவுக்கு பந்த் நடைபெற்று வருகிறது.
மாநில வாரியாக பந்த நிலவரம் பற்றிய தொகுப்பு பின்வருமாறு: ஒடிசாவில் சிஐடியு-வின் ஆதரவு அமைப்பான கோர்தா மாவட்டப் பிரிவு உறுப்பினர்கள் பந்த்துக்கு ஆதரவாக புவனேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பிஹாரில் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் மாணவர் அணியினர் ஜெஹனாபாத் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
கேரளாவைப் பொருத்தவரை பெரும்பாலான நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மத்திய அரசைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்லாது தனியார் வாகனங்களும் இயக்கப்படாததால் பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. கோழிக்கோட்டில் ஓடிய அரசுப் பேருந்துகளை தடுத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் திருவனந்தபுரத்திலும் காலை முதலே சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.


ஹெல்மட் போட்டு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்: மேற்கு வங்கத்தில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாதவ்பூர் உள்பட பல ரயில் நிலையங்களில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஜாதவ்பூர் 8B பேருந்து நிலையப் பகுதிகளைச் சுற்றி கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மட் அணிந்து வாகனங்களை இயக்குவதையும் காண முடிந்தது.

தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கவில்லை: நாடுதழுவிய வகையில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு சேவைகள், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதன்படி போக்குவரத்தில் பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை.
தமிழகத்தில் ஆளும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதவிர ஜாக்டோ – ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில மையம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளன.
இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாது என்று தலைமைச்செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி ஸ்தம்பித்தது! மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று பந்த் துவங்கியது. கடைகள் அடைக்கப்பட்டு தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. திரையரங்கு,மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டுள்ளன.
பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தியுள்ள தலைமை செயலகம், காலை 11 மணிக்குள் அனைத்து துறைகளிலும் வராதவர்கள் பெயர் பட்டியலை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள், இண்டியா கூட்டணி தலைவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பந்த் போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள்,டெம்போக்கள் இயக்கப்படவில்லை. தமிழக மற்றும் புதுச்சேரி அரசின் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. திண்டிவனம் புறவழிச் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கடலூர் மற்றும் விழுப்புரம் சாலைகள் வழியாக செல்லும் பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் கூற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் மறுப்பும்: 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ள இந்த பந்த்தில் 213 சங்கத்தினர் கலந்து கொள்ளப்போவதில்லை என தங்களுக்கு உறுதியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய அரசு தொழிலாளர் சங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து, போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. ஆனால், இந்த பந்த் மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
போராட்டம் ஏன்? மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் நாங்கள் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆனால், அதற்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வருடாந்திர தொழிலாளர் மாநாட்டை அரசு நடத்தவில்லை. அதற்குப் பதிலாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுகிறது. வணிகம் செய்வதை எளிதாக்குதல் என்ற பெயரில் முதலாளிகளுக்கு சாதகமான கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. அவுட்சோர்சிங், ஒப்பந்த வேலைவாய்ப்பு மற்றும் தற்காலிக நியமனங்கள் அதிகரித்து வருகின்றன. தொழிற்சங்க இயக்கத்தை முடக்குதல், வேலை நேரத்தை அதிகரித்தல், தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமையை பறித்தல், வேலைநிறுத்த உரிமையை பறித்தல் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுவதை குற்றமற்ற தாக்குதல் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளன.
வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வுகாண காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரித்தல், இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். ஆனால், முதலாளிகளை ஊக்குவிக்க இஎல்ஐ (வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்தை அரசு மும்முரமாக செயல்படுத்துகிறது.
அரசுத் துறைகள் இளம் திறமையாளர்களை பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, ஓய்வுபெற்ற ஊழியர்களை அதிக அளவில் பணியில் அமர்த்துகின்றன. ரயில்வே, தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம், எஃகு மற்றும் கல்வித் துறைகளில் இந்த நியமனம் அதிகமாக உள்ளது. இது, நாட்டின் மக்கள் தொகையில் 35 வயதுக்கு உட்பட்ட 65 சதவீதம் பேருக்கும், வேலையின்மை அதிகமாக உள்ள 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும். எனவே முறைசார் மற்றும் முறைசாரா அல்லது அமைப்புசாரா பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிற்சங்கங்களால் வேலைநிறுத்த ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.