பெங்களூரு: “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” என்று கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள ராமதீர்த்தா மலையில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார்
கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருப்பதை கண்டனர். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் நினா குடினா (40) எனவும், அவர் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கினர்.
விசாரணை மேற்கொண்ட கோகர்ணா போலீஸாரிடம் நினா கூறியதாவது: நான் ரஷ்யாவைச் சேர்ந்தவள். 2016-ம் ஆண்டு சுற்றுலா பயணியாக கோவாவுக்கு வந்தேன். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து கோகர்ணாவில் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். இங்கிருந்து நேபாளத்துக்கு சென்று, 2017ல் மீண்டும் கோகர்ணாவுக்கு வந்தேன். இந்த குகையை எனக்கு கடந்த 8 ஆண்டுகளாக தெரியும்.
ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால் உள்ளூர் சாமியார் ஒருவர் தியானம் செய்வதற்காக இந்த குகையை காட்டினார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலையில், என்னுடன் மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) உடன் இருக்கிறார்கள்.
என் மகள்களுக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன். தினமும் ஆற்றில் குளித்துவிட்டு 3 பேரும் தியானம் செய்வோம். 10 நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவேன். எனக்கு தேவையான பணத்தை உறவினர்கள் சிலரும், நண்பர்களும் அனுப்பி வைப்பார்கள். என்னிடம் செல்போன் இருந்தாலும், அதனை பெரிதாக பயன்படுத்த மாட்டேன்.
இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் ரஷ்ய பெண்ணையும், அவரது மகள்களையும் கோகர்ணா மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பரிசோதித்து, ரஷ்யாவுக்கு மீண்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.