புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான், இந்தியாவின் மனைவியாகிவிட்டது என்று ராஜஸ்தான் எம்பி அனுமன் பெனிவால் கூறியதை கேட்டு மக்களவையில் சிரிப்பலை எழுந்தது. ராஜஸ்தானின் நாகவூர் பகுதியை சேர்ந்தவர் அனுமன் பெனிவால்.
வழக்கறிஞரான இவர் கடந்த 2003-ல் இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2004-ம் ஆண்டில் பாஜகவில் ஐக்கியமானார். கருத்து வேறுபாடு காரணமாக 2013-ல் பாஜகவில் இருந்து வெளியேறி 2018-ல் ராஷ்டிரிய லோக்தந்ரிக் என்ற கட்சியை தொடங்கினார்.
ராஜஸ்தானின் நாகவூர் தொகுதி எம்பியான இவர், மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது: சிந்தூர் என்றால் குங்குமம் என்று அர்த்தம். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் நெற்றியில் பாதுகாப்பு படை குங்குமத்தால் திலகமிட்டு உள்ளது.
இந்து பாரம்பரியத்தின்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமத்தால் திலகமிட்டால் இருவரும் கணவன், மனைவி ஆகி விடுவார்கள். இந்த பாரம்பரியத்தின்படி தற்போது பாகிஸ்தான், இந்தியாவின் மனைவியாகிவிட்டது. புதுமனைவியை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும். இவ்வாறு அனுமன் பெனிவால் பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் ஆளும் கட்சி எம்பிக்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள் காரசாரமாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு நடுவே அனுமன் பெனிவால் நகைச்சுவையோடு பேசி கலகலப்பை ஏற்படுத்தினார். அவரது கருத்தால் மக்களவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.