புதுடெல்லி: பாதுகாப்பு படையினருக்கு மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, பாகிஸ்தான் படையினர் துருக்கி அளித்த ட்ரோன்களை அதிகளவில் பயன்படுத்தின.
இவற்றில் சிலவற்றில் ஆயுதங்களும், மற்றவைகளில் கேமிரா மட்டுமே இருந்தன. இந்திய எல்லைப் பகுதிகளின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக இந்த ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இவற்றை நமது வான் பாதுகாப்பு கருவிகள் நடுவானில் சுட்டு வீழ்த்தின.
எதிர்காலத்தில் போரில் வீரர்களை ஈடுபடுத்துவதற்கு பதில் ட்ரோன்கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு படையினருக்கு மத்தியப் பிரதேசத்தில், ‘க்கோல்ட் ஸ்டார்ட்’ என்ற பெயரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவது, எதிரி நாட்டு ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்துவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த பயிற்சி பாதுகாப்பு படையின் அனைத்து பிரிவுகள், தொழில்துறையினர், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கல்வித்துறையினரின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படுகிறது.