புதுடெல்லி: பாஜக மீது வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கடந்த மாதம் வைத்திருந்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், பாஜகவின் பின்னணியில் தேர்தல் ஆணையம் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக கடந்த மாதம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு அவரிடம் ஆதாரமும், உறுதிமொழி பத்திரமும் கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். ‘வாக்கு திருட்டு’ விவகாரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி உள்ளிட்டவற்றை முன்வைத்து பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார்.
“பாஜகவின் வாக்கு திருட்டு பின்னனியில் தேர்தல் ஆணையம் உள்ளதா? சில விஷயங்களை நாம் வரிசைப்படுத்தி பார்க்க வேண்டி உள்ளது. கடந்த 2023-ல் கர்நாடக மாநில தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டு இருப்பதை ஆலந்த் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கண்டறிந்தது. நுட்பமான நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டது.
வாக்காளர் மோசடி விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவானதில் சுமார் 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க காங்கிரஸ் அரசு சிஐடி விசாரணையை முன்னெடுத்தது.
ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ட்விஸ்ட் ஆச்சரியம் தந்தது. போலிகளை கண்டறிய சில ஆவணங்கள் இருந்தால் போதும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், அதை மாற்றிக்கொண்டு வாக்கு திருட்டு மோசடியில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டது. அதை திடீரென தடுக்க வேண்டிய காரணம் என்ன? யாரை காக்க பார்க்கிறது பாஜக-வின் வாக்கு திருட்டு துறை.
தனிநபரின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்” என மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பதவில் தெரிவித்துள்ளார்.