புதுடெல்லி: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் சார்பில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி சந்தீப் பந்தோபாத்யாய, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவ சேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) எம்பி சுப்ரியா சுலே, பிஜூ ஜனதா தள எம்பி சஸ்மித் பத்ரா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்கள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கினார். அப்போது, “இந்திய ராணவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும். நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்று கூறியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “கூட்டத்தின் தொடக்கத்தில் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் போது அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியைக் காட்டினர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன. எம்.பி.க்களிடமிருந்து சில ஆலோசனைகள் வந்தன.” என தெரிவித்தார்.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் அரசாங்கத்துக்கு எங்கள் முழு ஆதரவையும் அளித்துள்ளோம். மல்லிகார்ஜுன கார்கே கூறியது போல், நாங்கள் விவாதிக்க விரும்பாத சில விஷயங்கள் இருப்பதாக அவர்கள் (அரசாங்கம்) கூறினர்.” என்றார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில தினங்களில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.