புதுடெல்லி: பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள் குறித்து எடுத்துரைக்க வெளிநாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் நாடு தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காமில், பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தது. தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு தொடர்பாக வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள் குறித்து எடுத்துரைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்து விட இந்தியா முடிவு செய்துள்ளது.
கட்சி பேதமின்றி எம்.பி.க்கள் குழுக்கள் இதற்காக தேர்வு செய்யப்பட உள்ளன. இதுதொடர்பான உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருவது தொடர்பாகவும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் தொடர்பாகவும் பல்வேறு நாடுகளிடம் விளக்கி, இந்தியாவுக்கு ஆதரவான நிலையைப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ்தான் ஆதரவு நாடுகளிடம், அதன் உண்மையான முகத்தைத் தோலுரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்காகவே இந்த எம்.பி.க்கள் குழுவை இந்தியா அனுப்புகிறது. இதற்காக இந்திய உளவுத்துறை, பாதுகாப்புப் படைகளிடம் தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுப் பெற்று வருகிறது. எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் செய்யும்” என்றார்.