ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதற்கு காலாவதி தேதி இல்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓ ) அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் கூறுகையில், “இன்று டிஜிஎம்ஓ அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை. மே 12ம் தேதி நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சந்திப்பில் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்கிறது. அதற்கு காலவரையறை இல்லை” என்று தெரிவித்துள்ளது.
நான்கு நாட்கள் நடந்த எல்லை தாண்டிய மோதலைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நிலம், வான், மற்றும் கடல் என அனைத்து வழிநடந்த தாக்குதலையும் உடனடியாக நிறுத்தும் வகையில் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து மே 12-ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இரண்டு தரப்பும் எந்த ஒரு துப்பாக்கிச்சூடு அல்லது எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் என்ற உறுதிப்பாட்டினைத் தொடர்வது தொடர்பான விஷயம் விவாதிக்கப்பட்டது.
என்றாலும், பின்பு பாகிஸ்தான் தரப்பு உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் மே 18-ம் தேதி நிறைவடைகிறது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்திருந்தது.
இதனிடையே, பாகிஸ்தானுடனான எல்லையில், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வியாழக்கிழமை இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இசாக் தார் தனது நாடாளுமன்ற உரையில், “பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறாது என்றும், இறுதியாக இது ஒரு பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் அது, ஒரு கூட்டுப்பேச்சுவார்த்தையாக இருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் அறிக்கை வந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்பும் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது.