புதுடெல்லி: பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘நான் சமீபத்தில் பூஞ்ச் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். அங்கு பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல் பொது இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.
பல வருட கடின உழைப்பு ஒரே அடியில் பாழாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பலர் கூறினர். பூஞ்ச் மற்றும் பிற எல்லைப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இன்று அவர்கள் இந்த ஆழமான நெருக்கடியைக் கடந்து செல்ல, அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும்.
பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளுக்கு இந்திய அரசு ஓர் உறுதியான மற்றும் தாராளமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான நிதி உதவியை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

