இந்தியா மீது பாகிஸ்தான் கடந்த 8-ம் தேதி நடத்திய தாக்குதலை முறியடிக்க, இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு பிரிவு எல்-70 பீரங்கி, இசட்யு-23 எம்.எம் துப்பாக்கி, சில்கா பீரங்கி, யுஏஎஸ் , எஸ்-400 சுதர்ஸன சக்ரா போன்ற போர் தளவாடங்களை பயன்படுத்தியது. அவற்றின் விவரம்:
எல் – 70 பீரங்கி: ட்ரோன்கள், ஏவுகணைகள், தாழ்வாக பறந்து வரும் விமானங்களை தாக்குவதற்கு ராணுவம் எல்-70 என்ற சிறிய ரக பீரங்கிகளை பயன்படுத்துகிறது. இதில் 40 எம்எம் ரக குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எல்-70 பீரங்கி போபர்ஸ் நிறுவன தயாரிப்பு. வானில் குறைந்த உயரத்தில் பறந்து வரும் இலக்குகளை தாக்குவதற்கு இது மிகவும் சிறந்த ஆயுதம். துல்லியமான தாக்குதல் நடத்துவதற்காக, இந்த எல்-70 பீரங்கியை நவீன எலக்ட்ரோ-ஆப்டிக்கல் கட்டுப்பாட்டு கருவிகளுடன் இதை இந்தியா மேம்படுத்தியுள்ளது.
இசட்யு-23 எம்எம் பீரங்கி: இசட்யு-23 எம்எம் என்பது இரட்டை பேரல்கள் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கி. இது சோவியத் கால மாடல் என்றாலும், இவற்றை எளிதாகவும், திறம்படவும் இயக்க முடியும் என்பதால், இது நீண்ட காலமாக ராணுவத்தில் உள்ளது. இவற்றை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்ல முடியும். தாழ்வான உயரங்களில் பறந்து வரும் இலக்குகளை இந்த பீரங்கி மூலம் சுடுவது எளிது. இதன் திறனை மேம்படுத்துவதற்காக இசட்யு-23 பீரங்கி ரேடார் மற்றும் ஆப்டிக்கல் இலக்கு கருவிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சில்கா பீரங்கி: எதிரிநாட்டு விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ராணுவம் சில்கா பீரங்கியை பயன்படுத்துகிறது. இது இசட்எஸ்யு – 23-4 எனவும் அழைக்கப்படுகிறது. இது ரேடார் வழிகாட்டுதல்படி துல்லிய தாக்குதல் நடத்தும் பீரங்கி வாகனம். இதில் 23 எம்எம் ரக பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வானில் பறந்து வரும் பல இலக்குகளை இது கண்காணித்து தாக்குதல் நடத்தும். இதனை நவீன கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் தெர்மல் இமேஜிங் மூலம் ராணுவம் நவீனமாக்கியுள்ளது.
ஆளில்லா வான்பாதுகாப்பு துப்பாக்கி (யுஏஎஸ்) – ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க உருவாக்கப்பட்ட ஆளில்லா வான் பாதுகாப்பு துப்பாக்கி யுஏஎஸ். எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டறிய, இதில் ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள், ஜாமர்கள் ஆகியவை உள்ளன. ட்ரோன்களை சுட்டு வீழ்த்த துப்பாக்கிகளும் உள்ளன. இதில் பல அடுக்கு பாதுகாப்பு உள்ளதால், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் ஆகியவற்றை ட்ரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்க இந்த யுஏஎஸ் பயன்படுத்தப்படுகிறது.