ஃபெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயுதமேந்திய ட்ரோன் ஒன்று தாக்கியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
முன்னதாக, நேற்று (மே 9) பின்னிரவில் காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத்தின் பூஜ் வரையிலான 26 இடங்களை பாகிஸ்தான் ட்ரோன்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதன்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களால் குறிவைக்கப்பட்டன.
இதில் பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயுதமேந்திய ட்ரோன் ஒன்று தாக்கியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
இது குறித்து ஃபெரோஸ்பூர் காவல்துறை அதிகாரி பூபிந்தர் சிங் சித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பெரும்பாலான ட்ரோன்கள் ராணுவத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர், மூன்று குடும்ப உறுப்பினர்களில் இருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
“ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக, மூன்று பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒரு பெண்ணின் நிலை மோசமாக உள்ளது. அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்ற இருவருக்கும் குறைவான தீக்காயங்கள் உள்ளன. நாங்கள் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கியுள்ளோம். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்று டாக்டர் கமல் பாகி தெரிவித்துள்ளார்.