புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாகிஸ்தானை காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இப்படிச் சொல்வதன் அர்த்தம், பாகிஸ்தான் குற்றமற்ற நாடு என்பதாகும். அவர் யாரைக் காப்பாற்ற விரும்புகிறார்? பாகிஸ்தானைப் பாதுகாப்பதால் அவருக்கு என்ன லாபம்?
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் நேற்று நடந்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் 3 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவர்களில் இருவரது வாக்காளர் அடையாள அட்டை எண்கள் எங்களிடம் உள்ளன. அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை.
அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை எனில், பாகிஸ்தான் ஏன் தாக்கப்பட்டது என்ற கேள்வியையும் ப. சிதம்பரம் எழுப்பியுள்ளார். பாகிஸ்தானைக் காப்பாற்ற அவர்கள் (காங்கிரஸ்) செய்யும் சதித்திட்டத்தை 130 கோடி இந்தியர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஏப்ரல் 24ம் தேதி பஹல்காமுக்குச் செல்லாமல் பிரதமர் மோடி ஏன் பிஹாருக்குச் சென்றார் என மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார். பஹல்காம் தாக்குதல் நடந்தபோது பிரதமர் வெளிநாட்டில் இருந்தார். பிரதமர் மோடி பிஹார் சென்றபோது, பஹல்காமில் ராகுல் காந்தி மட்டுமே இருந்தார். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. நாட்டின் குடிமக்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடந்தால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டியது பிரதமரின் கடமை.
ஏப்ரல் 30-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டு அதிகாலை 1.04 மணி முதல் 1.24 மணிக்குள் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்னின் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், பாகிஸ்தானிய பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை.
இந்த தாக்குதலை அடுத்து நமது டிஜிஎம்ஓ, இந்தியா தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி பயங்கரவாத உள்கட்டமைப்பை தாக்கியதாக பாகிஸ்தான் டிஜிஎம்ஓவிடம் தெரிவித்தார். இது மன்மோகன் சிங் ஆட்சி அல்ல, அமைதியாக இருப்பதற்கு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ரத்தம் சிந்தவைத்த பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு ஜவஹர்லால் நேரு மட்டுமே காரணம். 1960ல் சிந்து நதி நீரில் 80% பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. 1971ல் சிம்லா ஒப்பந்தத்தின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் மறந்துவிட்டது. அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷர்மீர் பகுதியை கைப்பற்றி இருந்தால், இப்போது அங்குள்ள முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.” என தெரிவித்தார்.