ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஷாகுர் கான் என்பவர் ஜெய்சால்மரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஷாகுர் ஜெய்சால்மர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இஸ்லாமாபாத்துடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள் கானின் மொபைல் போனில் இருந்ததைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்காக உளவு பாத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஷாகுர் கான் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்திருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவர் கண்காணிப்பில் இருந்தார். அவர் நேற்றிரவு (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார்” என்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஷாகுர் கான் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் சாலே முகம்மதுவுக்கு தனிச்செயலாளராக கான் இருந்துள்ளார். முகம்மதுவும், கானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
அடிக்கடி பாகிஸ்தான் பயணம்: ஷாகுர் கான் கைது செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்பு உளவுத்துறை அவரை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றது. விசாரணையின் போது, தனது மொபைலில் இருந்த இஸ்லாமாபாத் தொடர்பான எண்கள் குறித்து விளக்க கான் தவறிவிட்டார். என்றாலும் கடந்த காலங்களில் 6-7 முறை இஸ்லாமாபாத் சென்று வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
கானின் மொபைல் போனில் இருந்து ராணுவம் தொடர்பான முக்கியமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் அவரின் மொபைலில் இருந்து பல பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கானின் வங்கிக்கணக்கு உள்ளிட்ட நிதிபதிவுகள் குறித்தும் புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். உளவுத் துறையினர் கானிடம் இன்று ஜெய்ப்பூரில் விசாரணை நடத்த உள்ளனர்.
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்த சில நாட்களுக்கு பின்பு இந்த ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது சம்பவம் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.