சண்டீகர்: பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக பஞ்சாப் மாநிலத்தில் ஜஸ்பிர் சிங் என்ற யூடியூர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இவர், 1.1 மில்லியன் சந்தாதாரர்களுடன் ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனலை, நடத்தி வந்தார்.
ரூப்நகர் மாவட்டத்தில் மஹ்லான் கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்பிர் சிங், மொஹாலியை அடிப்படையாகக் கொண்ட மாநில சிறப்பு நடவடிக்கை பிரிவினரால் (State Special Operations Cell) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ராவுக்கு பிறகு சமீப வாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சமூக ஊடக படைப்பாளி ஜஸ்பிர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜோதியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
பஞ்சாப் போலீஸாரின் கூற்றுப்படி, ஜஸ்பிர் சிங் பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரியான ஷாகிஸ் என்கிற ஜுத் ரன்தாவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். மேலும் ஜஸ்பிர், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷனின் முன்னாள் அதிகாரியான ஈஷான் உர் ரஹிம் என்கிற டேனிஷ் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஈஷான் உளவு பார்த்த குற்றச்சாட்டில் நாடுகடத்தப்பட்டார்.
டேனிஷின் அழைப்பின் பேரில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் ஜஸ்பிர் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் உரையாடியுள்ளார். மேலும் ஜஸ்பிர், 2020, 2021 மற்றும் 2024 என மூன்று முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார்.
ஜஸ்பிர் சிங்-ன் மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது பல்வேறு பாகிஸ்தானை சேர்ந்த தொடர்பு எண்கள் அழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஜோதி மல்ஹோத்ராவின் கைதுக்கு பின்பு, ஐஎஸ்ஐ- உடன் தொடர்புடை பதிவுகளை ஜஸ்பிர் அழிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் போலீஸார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “ஜான் மஹால் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஜஸ்பிர் சிங் என்பவர், பயங்கரவாத வலையமைப்பின் ஒரு பகுதியான பாகிஸ்தான் உளவு அமைப்பு அதிகாரியான ஷாகிர் என்கிற ஜாட் ரந்தாவா என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர் ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானியரான, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய முன்னால் அதிகாரி ஈஷன் உர் ரஹீம் என்பருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததற்கான குற்றச்சாட்டில் இதுவரை 7 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.