புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என தெரிவித்த இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, அதன் காரணமாகவே இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அறிவித்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக முப்படைகளின் டிஜிஎம்ஓக்கள் (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள்) இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, “ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்றைய இரவு பெரும்பாலும் அமைதியாக இருந்தது. சமீபத்திய நாட்களில் முதல் அமைதியான இரவு இது என கூறலாம். அந்த அளவுக்கு எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை.
மே 7 ஆம் தேதி இந்தியா, பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில், ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது. இருப்பினும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது. இதனால் இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனவே, அடுத்தடுத்த மோதலில் அவர்களுக்கு ஏற்பட்ட எந்தவொரு சேதத்துக்கும் பாகிஸ்தானே பொறுப்பு. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, எதிரியின் நீள, அகலம் வரை நாங்கள் குறிவைத்துள்ளோம். இந்த மோதலில், இந்தியத் தரப்பில் மிகக் குறைந்த இழப்புகள் மட்டுமே ஏற்பட்டன.
பாகிஸ்தான் ஆயுதப்படைகள் துருக்கி ட்ரோன்களை பயன்படுத்தியது குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் பயன்படுத்தும் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் எதிர்கொள்ள இந்திய ஆயுதப்படைகள் முழுமையாக தயாராக இருக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப இந்தியப் படைகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி வளங்களைக் கொண்டதாகக் கூறப்படும் பாகிஸ்தானில் உள்ள கிரானா மலைகளை இந்திய ஆயுதப்படைகள் தாக்குமா என கேட்கிறீர்கள். அந்த இடத்தில் அணுசக்தி நிறுவல்கள் இருப்பது குறித்து எனக்குத் தெரியாது. அதோடு, அது எங்கள் இலக்குகளில் ஒன்றல்ல என்று தெரிவித்தார்.
அனைத்து இந்திய தளங்களும், விமானப்படை தளங்களும் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. தேவைப்பட்டால் எந்தவொரு எதிர்காலப் பணிகளையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளன.” என்று தெரிவித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் அளித்த பேட்டியில், “ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தலின் போது மூன்று சேவைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு முழுமையாக இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் குறிவைக்கும் போக்கு அதிகரித்திருந்தது.
பல அடுக்கு எதிர் ட்ரோன் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தானின் பதிலடிக்கு இந்திய தரப்பு பதிலடிக்கு தயாராக இருந்தது. பாகிஸ்தான் விமான நிலையங்களை நம் படைகள் சேதப்படுத்தின. அதேநேரத்தில், அனைத்து இந்திய விமான நிலையங்களும் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.” என கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது கடற்படை மேற்கொண்ட நகர்வுகளைக் குறிப்பிட்ட வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத், “இந்திய கடற்படையின் வான் திறன்கள் அபாரமானவை. அரபிக்கடலில் கடற்படையின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, பாகிஸ்தான் தனது விமானப்படைகளை அடைத்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.” என தெரிவித்தார்.