புதுடெல்லி: பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்தும், `ஆபரேஷன் மகாதேவ்’ குறித்த புதிய தகவல்களையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஏஐ) வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் கடந்த 3 மாதங்களாக இந்திய ராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டு வந்தன.
இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் மாநில போலீஸார் இணைந்து நடத்திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் சுலைமான் என்கிற ஃபைசல், ஹம்சா அப்ஹான், ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் சுலைமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான், ஹம்சா அப்ஹான் இருவரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு சோனமார்க் சுரங்கப்பாதை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜிப்ரான் மற்றும் ஹம்சா அப்ஹான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கண்டறிந்தது எப்படி? – இந்நிலையில் ஆபரேஷன் மகாதேவ் மூலம் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றது எப்படி என்பது குறித்து என்ஏஐ வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ஹவாய் செயற்கைக்கோள் தொலைபேசியை(சாட்டிலைட் போன்) பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக் கொண்டதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் சாட்டிலைட் போன் வழியாகப் பேசியபோது சந்தேகத்துக்கு இடமான தகவல்களை என்ஏஐ அதிகாரிகள் இடைமறித்துப் பெற்றுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு 3 மாதங்களாக குறிப்பிட்ட அந்த சாதனங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தாமல் இருந்தனர். அண்மையில்தான் அந்த சாதனங்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதன் மூலம் அப்பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களின் தகவல் தொடர்புகளை தொடர்ந்து சில நாட்களாக இந்திய ராணுவத்தினர் கண்காணித்து வந்தனர்.
பின்னர் உள்ளூர் மக்களை ரகசியமாக சந்தித்த இந்திய ராணுவத்தினர் அவர்களுக்கு தீவிரவாதிகள் குறித்த தகவல்களைக் கொடுத்து கண்காணித்து தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் கொடுத்த துல்லியத் தகவலின் கீழ் தீவிரவாதிகளின் இருப்பிடம் ராணுவத்துக்கு கிடைத்தது. தீவிரவாதிகளை, ராணுவம் சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
இந்த ஆபரேஷனுக்கு ராணுவத்தின் ‘4 பாரா சிறப்புப் படை’ வீரர்களே தலைமை தாங்கியுள்ளனர். இந்திய ராணுவத்தின் கீழ் இயங்கும் 4 பாரா சிறப்புப் படை தீவிரவாத எதிர்ப்பு, உளவு பார்த்தல், தீவிரவாதிகளை நேரடியாக எதிர்த்து சண்டையிடுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஜம்மு – காஷ்மீரில் நடத்தப்படும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் இந்த பிரிவையே ராணுவம் பயன்படுத்தி வருகிறது. தீவிரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக துல்லிய தாக்குதல்களை நடத்துவதற்கு பெயர் பெற்ற இந்த பிரிவுதான் 2016-ல் துல்லியத் தாக்குதலை (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து, தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியமாக அழித்ததில் இந்த பிரிவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டறிந்து சுட்டுக் கொன்றுள்ளது முக்கியத்துவம் பெற்று உள்ளது.