ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்லப்பட்ட சுலேமான் ஷா என்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். இதற்காக ‘ஆபரேஷன் மகாதேவ்’ எனும் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டச்சிகாம் பகுதியை நோக்கி பயங்கரவாதிகள் நகர்ந்திருக்கலாம் என உளவுத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தீவிரப்படுத்தின.
இந்த பின்னணியில், டச்சிகாம் அருகே லிட்வாஸ் என்ற பகுதியில் வெளிநாட்டு நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். ஜபர்வான் மற்றும் மகாதேவ் முகடுகளுக்கு இடையேயான அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்று காலை 11 மணி அளவில் இந்த என்கவுன்ட்டர் நடந்து.
இது தொடர்பாக ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சினார் ராணுவப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது” என தெரிவிக்கப்பட்டது. இந்த 3 பயங்கரவாதிகளில் ஒருவர், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சலேமான் ஷா என்பது தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காஷ்மீர் ஐஜி விதி குமார் பிர்டி, “இது ஒரு நீண்ட நடவடிக்கை. அது தொடர்கிறது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை, துணை ராணுவம், ராணுவம் ஆகிய பாதுகாப்புப் படைகள் இணைந்து மிகவும் உயரமான பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன.
மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை. இந்த நேரத்தில் நான் அதிகம் பேச விரும்பவில்லை. சரியான நேரத்தில் உங்களிடம் விவரங்களை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். இறந்தவர்களை அடையாளம் காண எங்களுக்கு சிறிது நேரம் ஆகும். பாதுகாப்புப் படையினர் இன்னமும் உள்ளே இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.