புதுடெல்லி: “துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பஹல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது” என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து நாளை (மே 8) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. காலை 11 மணியளவில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலியாக, பிரதமர் மோடி அவரது ஐரோப்பிய பயணத்தை ஒத்திவைத்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆபரேஷன் சிந்தூர் – ‘இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை. அத்துமீறல் இல்லாதவை.
இந்தத் தாக்குதலில் எந்த பாகிஸ்தானிய ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைபிடித்துள்ளது. 25 இந்தியர்களும், ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விவரம்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு விவரிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது, “துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பஹல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது. முன்கூட்டியே செய்யப்பட்ட விரிவான தயாரிப்புகளின் அடிப்படையை கண்டிப்பாக பின்பற்றி ராணுவம் இப்பணியை மேற்கொண்டது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து வேட்டையாடிய நமது ராணுவத்தின் செயல் மிகவும் பாரட்டத்தக்கது. பெருமை கொள்ளத்தக்கது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஒருமனதாக நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், மேசைகளை தட்டி அரசின் நடவடிக்கையை அவர்கள் வரவேற்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பிரதமர் மோடி மற்றும் நமது ராணுவ அமைப்புடன் இந்த தேசமே துணை நிற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அமித் ஷா ஆலோசனை: இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிஹார், சிக்கிம், மேற்கு வங்கம், லடாக் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வர்கள், காவல் துறை டிஜிபி.க்கள், தலைமைச் செயலர்கள் ஆகியோருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்தியா விளக்கம்: இந்தியா – பாகிஸ்தான் மோதல் முற்றியுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்கோ ரூபியோ, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். இரு தரப்பு தலைமையுடனும் நான் தொடர்பில் இருக்கிறேன். இது விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறேன். அமைதியான தீர்வை நோக்கி இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைகள் ஈடுபடும் என்ற ட்ரம்ப்பின் கருத்துக்களை நான் எதிரொலிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.