புதுடெல்லி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இறந்த ஒருவரின் மகளான அசாவரி ஜக்தலே, மகாராஷ்டிராவின் புனேயிலிருந்து தனது நன்றியை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இந்திய ராணுவத்துக்கும் மத்திய அரசுக்கும் நன்றி கூறுகிறேன். இன்று அந்த 26 பேருக்கும் அமைதி கிடைக்கும். இன்று நாமும் நிம்மதியாக தூங்க முடியும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது எனவும் நாட்டில் அமைதி நிலவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மகாதேவ் போன்ற என்கவுன்ட்டர்களை அரசு தொடர வேண்டும்” என்றார்.
பஹல்காம் தாக்குதலில் இறந்த புனே நகரை சேர்ந்த கவுஸ்தப் கன்போட்டின் மனைவி சங்கீதா கன்போட் – கூறுகையில், “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிடிக்கப்பட்டு, கொல்லப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் கொல்லப்பட்டனர். இது நல்ல விஷயம். ராணுவத்துக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.