புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்தான் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேற்று மீண்டும் உறுதியாக கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பஹல்காமில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்தான். அவர்களில் ஒருவர் கூட உள்ளூரை சேர்ந்தவர்கள் இல்லை. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் அரசு ஆவணங்கள், பயோமெட்ரிக் தகவல்கள், வாக்காளர் அடையாள அட்டை, நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள், கராச்சியில் செய்யப்பட்ட சாக்லேட்டுகள் போன்ற பல ஆதாரங்கள் உள்ளன.
முதல் முறையாக அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் என்பதை உறுதி செய்வதற்கு பாகிஸ்தானின் அரசு ஆவணங்களே கைப்பற்றப்பட்டுள்ளன. ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சுலைமான் என்கிற பைசல் ஜாட், அபு ஹம்சா என்கிற அபஹான், யாசிர் என்கிற ஜிப்ரான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் 2 பேரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டைகள் (என்ஏ-125, என்ஏ-79) கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சேதம் அடைந்த சாட்டிலைட் போன், மைக்ரோ எஸ்டி கார்டு, கைரேகைகள், குடும்ப உறுப்பினர்கள் என அனைத்து தகவல்களும் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ரவாலாகோட் அருகில் கோயான் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வடக்கு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு அருகே இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். சாட்டிலைட் போன் மூலம் அவர்கள் பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இவை எல்லாம் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள நேரடி தொடர்பை அம்பலப்படுத்தி உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.