புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார்.
மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ் என கூட்டுப் படையினர் எடுத்த நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சுலைமான் என்கிற பைசல், அப்ஹான், ஜிப்ரான் என்ற 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சுலைமான் என்பவர் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஏ அந்தஸ்தில் இருந்த கமாண்டர் அதேபோல் அப்ஹானும் ஜிப்ரானும் லஷ்கர் தீவிரவாதிகள்.
தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள்தான் என்பதற்கு மத்திய அரசிடம் ஆதாரங்கள் உள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேரிடம் இருந்த பாகிஸ்தான் வாக்காளர் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தீவிரவாதிகளிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட சாக்லேட்டுகள் கூட பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவைதான்.
கடந்த 1948-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப மீட்டெடுக்க நமது ராணுவம் நிலைகொண்டிருந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு ஒருதலைபட்சமாக போரை நிறுத்தினார். அதுதான் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு காரணம்.
‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்துதான் வந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?’ என்று காங்கிரஸை சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 2 நாட்களுக்கு முன்னர் கேள்வி எழுப்பினார். அது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இதன் மூலம் ப.சிதம்பரம் என்ன சொல்ல வருகிறார்? யாரை பாதுகாக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்? பாகிஸ்தானை பாதுகாப்பதன் மூலம் உங்களுக்கு என்ன லாபம்?
காங்கிரஸ் சார்பில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. அப்போது அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். ஆனால், ஆபரேஷன் சிந்தூரின் போது நமது ராணுவ உயரதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது குறித்து தகவல் தெரிவித்தனர். நமது நாட்டை பாதுகாக்கும் உரிமையின் அடிப்படையில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நமது ராணுவ அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர்.
மன்மோகன் அரசை போல தீவிரவாதத்தை வேடிக்கை பார்க்காது தற்போதைய மோடி தலைமையிலான அரசு. பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை கேட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று தெரிகிறது. இது எந்த மாதிரி அரசியல் என்று தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.