புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சமீபத்தில் ஊடகத்துக்கு அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது “பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் இருக்கினறனவா? அவர்கள் உள்ளூரை சேர்ந்த தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். அந்த தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு என்ஐஏ என்ன செய்தது. இதுபோன்ற கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்காதது ஏன்? ஆபரேஷன் சிந்தூரில் இந்திய தரப்பில் ஏற்பட்ட சேதம் என்ன? இவற்றை பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசாதது ஏன்?’’ என்று பல கேள்விகளை எழுப்பினார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடைபெறும் போதெல்லாம், பாகிஸ்தானை பாதுகாக்க காங்கிரஸ் முந்திக் கொள்ளும். அதுபோல் மீண்டும் ஒரு முறை பஹல்காம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெறும் தீவிரவாதத்தை நமது பாதுகாப்புப் படைகள் போரிட்டு தடுக்கின்றன. ஆனால், இந்தியாவின் எதிர்க்கட்சியினர் என்பதை விட பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் வழக்கறிஞர்கள் போல் காங்கிரஸ் தலைவர்கள் செயல்படுகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது, தெளிவின்மை இருக்க கூடாது. ஆனால், நமது எதிரி நாடான பாகிஸ்தானை பாதுகாக்கும் வகையில் காங்கிரஸ் கருத்து தெரிவிக்கிறது. இவ்வாறு அமித் மாளவியா கூறியுள்ளார்.