அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த அதிர்ச்சி சம்பவத்தை விவரித்துள்ளார்.
“மதியம் நான் வீட்டில் இருந்தேன். அப்போது திடீரென பலத்த சப்தம் கேட்டது. அது ஏதோ பயங்கரமான வெடி விபத்து போல இருந்தது. முதலில் பூகம்பமாக இருக்கும் என நான் நினைத்தேன். தொடர்ந்து என்னவென்று பார்க்க வீட்டில் வெளியே வந்தேன். வானுயர கரும்புகை எழுந்திருந்ததை பார்த்தேன். பின்னர் வீட்டில் இருந்து இங்கு வந்து பார்த்தபோது விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதறிய பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் இருந்தன. அது மிகவும் அதிர்ச்சி அளித்தது” என அவர் கூறியுள்ளார்.
என்ன நடந்தது? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விடுதிக்கு நேர்ந்த துயரம்: அகமதாபாத்தின் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விமானம் மோதியதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதில் நான்கு பேர் இளங்கலை மாணவர்கள் மற்றும் ஒருவர் முதுகலை மாணவர் என்றும் கூறப்படுகிறது.
மாணவர்கள் உணவு சாப்பிடும் நேரத்தில் விடுதி மீது விமானம் விழுந்துள்ளதாக தெரிகிறது. உணவுடன் கூடிய தட்டுகள் மற்றும் தண்ணீர் டம்ளர்கள் மேசையில் மீது இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், பல கனவுகளை சுமந்து திரிந்த, அம்மாணவர்களின் துயர நிலையை எடுத்துரைக்கிறது. அகமதாபாத் விமான விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை பெற ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. | முழுமையாக வாசிக்க > அகமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்