புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஆசிஷ் கோப்ரகடே, எம்.ஸ்வாதி ஷெனாய் ஆகிய இருவரும் 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘கியூரியஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், லேப்டாப் அல்லது டி.வி. முன்னால் அதிகபட்சம் 12 மணி நேரம் செலவிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய குழந்தைகள் சராசரியாக 2.2 மணி நேரம், அதாவது கிட்டத்தட்ட 2 மடங்கு செலவிடுவதாக அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் அதிக நேரம் ஸ்கிரீனில் செலவிடுவதற்கும் அவர்களின் மொழி வளர்ச்சி மட்டுப்படுதல், அறிவாற்றல் செயல்பாடு குறைதல், சமூக திறன் வளர்ச்சி தடைபடுதல் ஆகியவற்றுக்கும் நேரடித் தொடர்புள்ளது. கூடுதலாக, உடல் பருமன், தொந்தரவுடன் கூடிய தூக்கம், கவனக்குறைவு பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான அபாயமும் அதிகம் உள்ளது.
குழந்தைகள் மருத்துவ நிபுணரும் பெலிக்ஸ் மருத்துவமனைகளின் தலைவருமான டி.கே.குப்தா கூறுகையில், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது அல்லது குழந்தைகள் அழும்போது அவர்கள் டி.வி. அல்லது செல்போன் பார்க்கச் செய்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். முதலில் பெற்றோர்கள் வீட்டில் ஸ்கிரீன் நேரத்தை குறைக்க வேண்டும்” என்றார்.