புதுடெல்லி: அனைத்து பயணிகளின் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் நோக்கில், ரயில்ஒன் செயலியை(RailOne App) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினார்.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரயில்வே தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய தலைமுறை ரயில்களை அறிமுகப்படுத்துவது, ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வது, பழைய ரயில் பெட்டிகளை புதிய ரயில் பெட்டிகளாக மேம்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளன.
ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் (CRIS) 40வது நிறுவன தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் RailOne என்ற புதிய செயலியை இன்று அறிமுகப்படுத்தினார். பயன்படுத்துவதற்கு எளிதான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு செயலி இது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை பெறுவது, ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிவதற்கான நேரடி ரயில் கண்காணிப்பு, குறை தீர்க்கும் சேவை, மின் கேட்டரிங், போர்ட்டர் முன்பதிவு மற்றும் கடைசி மைல் டாக்ஸி ஆகிய சேவைகளை இந்த செயலி மூலம் பெறலாம்.
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வழக்கம்போல் IRCTC-ல் தொடர்ந்து வழங்கப்படும். IRCTC உடன் கூட்டு சேர்ந்துள்ள பல வணிக பயன்பாடுகளைப் போலவே RailOne செயலியும் IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
mPIN அல்லது பயோமெட்ரிக் மூலம் உள்நுழையக்கூடிய ஒற்றை உள்நுழைவு வசதியை RailOne கொண்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள RailConnect & UTS செயலிகளையும் உள்ளடக்கி உள்ளது. பல பயன்பாடுகளை நிறுவ வேண்டிய அவசியமில்லை என்பதால், இந்த செயலி இடத்தை மிச்சப்படுத்துகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.