லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, இம்மாத தொடக்கத்தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக உ.பி. போலீஸார், வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) பதிவு செய்தனர்.
இதைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலாக இந்து அமைப்பினர் ‘ஐ லவ் மகாதேவ்’ பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் சிலர் போலீஸார் மீது கற்களை வீசியதால் வன்முறை ஏற்பட்டது. இந்தப் பேரணியில் வந்தவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 10 போலீஸார் காயமடைந்தனர். இதுதொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் 1,700 பேர் மீது வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த முஸ்லிம் மதத்தலைவரும், இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகிர் ராசாவை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
‘ஐ லவ் முஹமது’ பிரச்சாரத்தை ஆதரித்து அவர் செய்த வீடியோ அழைப்புக்குப் பிறகே நிலைமை பதற்றமானதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.